- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
சீடர்களின் சந்தேகம்.
இயேசுவின் சீடர்களுக்கு ஒரு சந்தேகம்,
தங்களுள் யார் பெரியவர்?
கப்பர்நகூமுக்கும் வீட்டிலிருக்கும்போது இந்த சந்தேகத்தை இயேசு தீர்த்து வைக்கிறார்.
"ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும்,
அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்."
உலகப் பார்வையில்,
ஆள்பவன் உயர்ந்தவன்
அடிமை தாழ்ந்தவன்.
ஆனால் ஆன்மீகப் பார்வையில்
"கடைசியாக இருப்பவன் தான் முதல்வனாக கருதப்படுவான்."
பணி செய்பவன் முதலாளியை விட உயர்ந்தவன்.
உலகம் உச்சியில் இருப்பவர்களை பார்த்து பெருமைப்படுகிறது.
ஆனால் கடவுள் தாழ்ந்து இருப்பவர்களை பார்த்தே பெருமைப்படுகிறார்.
தாழ்ச்சிதான் தலையாய புண்ணியங்களுள் முதன்மையானது.
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று தன்னைத் தானே தாழ்த்திய அன்னை மரியாள்தான்
இறுதியில் விண்ணக மண்ணக அரசியாக திரி ஏக தேவனால் முடி சூட்டப்பட்டாள்.
ஆண்டவர்
ஸ்நாபக அருளப்பரைப் பற்றி குறிப்பிடும்போது,
"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
"பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை."
சொன்ன உடனேயே,
"ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்." என்றும் கூறினார்.
(மத்.11: 11)
அன்னை மரியாளும் பெண்ணிலிருந்து பிறந்தவர் தான்.
இயேசுவும் பெண்ணிலிருந்து பிறந்தவர் தான்,
ஆனாலும் இயேசு ஸ்நாபக
அருளப்பரை அனைவரிலும் உயர்ந்தவராகக் கூறுகிறார்.
(அருளப்பரைப் புகழ்வதற்காக இயேசு மிகைப்படுத்தி கூறிய கூற்று.)
தாழ்ச்சியோடு தன்னை எல்லாரையும் விட மிகச் சிறியவர் என்று எண்ணி வாழ்பவர்
விண்ணரசில் ஸ்நாபக அருளப்பரைவிட
பெரியவராக கருதப்படுவார்.
இவ்வாறு உயர்வு நவிற்சியில் இயேசு கூறுவது தாழ்ச்சியின் மகிமையை நமக்கு உணர்த்துவதற்காகத் தான்.
ஆனால் விண்ணரசில் உயர்ந்தவராக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு
இவ்வுலகில் தன்னை சிறியவராக நினைக்க கூடாது.
நோக்கம் தாழ்ச்சியை அடித்து விடும்.
உண்மையிலேயே நேர்மையுடன் தன்னை மிகச் சிறியவன் என்று கருத வேண்டும்.
அன்னை மரியாள் விண்ணக மண்ணக அரசியாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னை அடிமை என்று கூறவில்லை.
தன்னை உண்மையிலேயே ஆண்டவருடைய அடிமை என்று கூறினாள்.
சர்வ வல்லமையையும் மகிமையும் உள்ள கடவுள்,
பாவம் தவிர மற்ற எல்லா பலகீனங்களும் உள்ள மனிதனாகப் பிறந்ததே
தனது போதனையை தானே வாழ்ந்து காட்டி போதிப்பதற்காகத்தான்.
பூங்காவனத்தில் இரத்த வியர்வையின் போது அவர் வெளிப்படுத்திய அச்சம் என்ற பலகீனம்,
அச்சத்தால் நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக,
அவரே ஏற்றுக் கொண்டது.
பலகீனத்தால் மனிதன் செய்கிற பாவங்களுக்கு
பககீனம் உள்ள மனிதனே பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்,
பாவம் தவிர, மற்ற எல்லா பலகீனங்களும் உள்ள மனிதனாக பிறந்து,
தனது பாடுகளாலும் மரணத்தாலும் மனிதர்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.
"தம்மையே வெறுமையாக்கி,
அடிமையின் தன்மை பூண்டு
மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றி,
தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
(பிலிப்.2:7,8)
நாம் உண்மையான தாட்சியோடு வாழ வேண்டுமென்றால்,
நாம் ஒவ்வொருவரும் நாம் தான் உலகிலேயே சிறியவன் என்று உறுதியாக கருத வேண்டும்.
மற்றவர்களை நம்மை விட சிறியவர்களாக எண்ணக் கூடாது.
ஒரு ஆசிரியர் கூட தனது மாணவர்களை விட தான் சிறியவன் என்று எண்ண வேண்டும்.
மாணவர்களிடமிருந்து ஆசிரியர் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
மாணவர்கள் ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.
அந்த கீழ்ப்படிதலை ஆசிரியரும் கற்றுக் கொண்டால்தான் அவரால் தலைமை ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து நடக்க முடியும்.
நான் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற போது நான் அறிந்த ஒரு பெரிய உண்மை
என்னிடமிருந்து மாணவர்கள் கற்றதை விட அவர்களிடமிருந்து நான் கற்றதே அதிகம் என்பதுதான்.
தனது 33 ஆண்டு வாழ்நாளில் 30 ஆண்டுகள் அன்னை மரியாளுக்கும் சூசையப்பருக்கும் இயேசு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
அவரைத் தங்கள் தலைவர் என்று கூறிக் கொள்ளும் அநேகர்
அவர் ஏற்படுத்திய கத்தோலிக்க திருச்சபைக்கு கீழ்படிய மறுத்ததால்தான்
இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவினை சபைகள் தலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கத்தோலிக்கர்களாகிய நாம் அனைவரும் நம்மையே திருச்சபையின் கடை நிலை ஊழியர்களாக பணிபுரிவோம்.
அப்போதுதான் இயேசுவுக்கு பிடித்த பிள்ளைகளாக இறை அரசில் என்றென்றும் அவரோடு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
Comments
Post a Comment